மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:02 AM IST (Updated: 17 Oct 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பா.ஜனதா அலுவலகம் மீது கேரட்டை வீசியதால் பரபரப்பு உண்டானது.

மும்பை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதை கண்டித்து மத்திய, மாநில பா.ஜனதா அரசுக்கு எதிராக தேசியவாத காங்கிரசார் நேற்று நரிமன்பாயிண்டில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் மும்பை தலைவர் சச்சின் அஹிர் தலைமையில் திரண்ட தேசியவாத காங்கிரசார் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது, தேசியவாத காங்கிரசார் கையில் கேரட்டை கொண்டு வந்திருந்தனர். திடீரென அவர்கள் அங்குள்ள பா.ஜனதா மாநில தலைமை அலுவலகம் மீது கேரட்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சச்சின் அஹிர் உள்ளிட்ட தேசியவாத காங்கிரசாரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.

Next Story