‘கடன் தரவேண்டும் என்றால் நீ வரவேண்டும்’ - உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேலாளரை அடித்து, உதைத்த பெண்


‘கடன் தரவேண்டும் என்றால் நீ வரவேண்டும்’ - உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேலாளரை அடித்து, உதைத்த பெண்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:44 PM GMT (Updated: 16 Oct 2018 10:44 PM GMT)

வங்கிக் கடன் கேட்ட பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண் சரமாரியாக அடித்து, உதைத்தார்.

பெங்களூரு,

தாவணகெரேயில் வங்கிக் கடன் கேட்ட பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண் சரமாரியாக அடித்து, உதைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தாவணகெரே டவுன் பழைய பஸ் நிலையத்தில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் தேவய்யா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், 38 வயதான பெண் ரூ.2 லட்சம் கடன் வழங்கும்படி அந்த தனியார் வங்கியில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த தேவய்யா, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

பின்னர், அவர் சில ஆவணங்களை குறிப்பிட்டு அதை தனது வீட்டுக்கு எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து, நேற்று முன்தினம் ஆவணங்களை எடுத்துக் கொண்டு கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வங்கி மேலாளரின் வீட்டுக்கு அந்தபெண் சென்றார்.

வீட்டுக்குள் அந்த பெண் நுழைந்தவுடன் தேவய்யா தனது வீட்டை பூட்டியுள்ளார். பின்னர், அவர் ‘கடன் கொடுக்க வேண்டும் என்றால் நீ எனது ஆசைக்கு இணங்கவேண்டும்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண், தேவய்யாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும், அவரை சரமாரியாக தாக்கி, வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தார். பின்னர் சாலையோரம் நிற்க வைத்து தேவய்யாவை தடி, செருப்பால் தாக்கியதோடு, காலால் உதைத்தார். இதனால் வலி தாங்க முடியாத தேவய்யா, ‘என்னை தாக்கினால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிரட்டல் விடுத்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்தபெண், தேவய்யாவை தொடர்ந்து தாக்கினார்.

இதுபற்றி அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் தேவய்யாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து அந்தபெண் தாவணகெரே மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவய்யாவை கைது செய்தனர். கடன் கேட்டு வந்த பெண்ணையே ஆசைக்கு இணங்குமாறு கூறி கடனாக கேட்ட தனியார் வங்கி மேலாளருக்கு அடி, உதை விழுந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தேவய்யா தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story