கர்நாடகத்தில் நடைபெறும் 5 தொகுதி இடைத்தேர்தலில் காங்.-ஜனதா தளம் எஸ் வெற்றி உறுதி - முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு


கர்நாடகத்தில் நடைபெறும் 5 தொகுதி இடைத்தேர்தலில் காங்.-ஜனதா தளம் எஸ் வெற்றி உறுதி - முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2018 11:30 PM GMT (Updated: 16 Oct 2018 11:30 PM GMT)

கர்நாடகத்தில் நடைபெறும் 5 தொகுதி இடைத்தேர்தலில் காங்.-ஜனதா தளம் எஸ் வெற்றி உறுதி என முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

சிவமொக்கா,

“கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வெற்றிபெறும்” என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மதுபங்காரப்பா சிவமொக்கா தொகுதியில் போட்டியிடுவதற்காக தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவர் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்களுடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். அதையடுத்து அவர் ஊர்வலமாக சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான தயானந்தை சந்தித்து வேட்புமனுவை சமர்ப்பித்தார். பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

“சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலும் அது பெரிய அளவில் பயன் அளிக்காது. காரணம் அடுத்த 4 மாத காலத்திற்குள் பதவிக்காலம் முடிந்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்துவிடும். இந்த நாடாளுமன்ற தேர்தல் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தேர்தல் ஆகும்.

இந்த கூட்டணி தற்காலிகமாக ஏற்பட்ட கூட்டணி அல்ல. இக்கூட்டணி 5 ஆண்டுகாலம் நீடிக்கும். 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்யும். தொடர்ந்து இக்கூட்டணி மக்களுக்காக உழைக்கும். ஆட்சி, அதிகாரம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்காக இக்கூட்டணி ஏற்படவில்லை என்பதை பா.ஜனதாவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வெற்றிபெறும். கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு, அதன்மூலம் குதிரைபேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இக்கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று இரவு-பகலாக எடியூரப்பா உழைத்து வருகிறார். அவருடைய கனவு என்றைக்கும் பலிக்காது.

முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவை மக்கள் ஆதரிப்பார்கள். அவரை மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் மந்திரி டி.சி.தம்மண்ணா, முன்னாள் மந்திரிகள் காகோடு திம்மப்பா, கிம்மனே ரத்னாகர், மந்திரி ஜெயமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுபங்காரப்பாவின் வேட்புமனு தாக்கலில் கலந்து கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story