புதுச்சத்திரம் அருகே : கலெக்டர் அலுவலக என்ஜினீயர் கடலில் விழுந்து தற்கொலை - போலீசார் விசாரணை


புதுச்சத்திரம் அருகே : கலெக்டர் அலுவலக என்ஜினீயர் கடலில் விழுந்து தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Oct 2018 3:30 AM IST (Updated: 17 Oct 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே கலெக்டர் அலுவலக என்ஜினீயர், கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

பரங்கிப்பேட்டை, 

கடலூர் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 57). என்ஜினீயரான இவர், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜகோபால், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு உதவி பொறியாளராக ராஜகோபால் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ராஜகோபால், தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரம் அருகே உள்ள மடவாபள்ளம் கடற்கரைக்கு சென்றார். கடற்கரையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, விறுவிறுவென கடலுக்குள் இறங்கி, ஆழமான பகுதிக்கு சென்று கடலில் மூழ்கி இறந்தார்.

பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவரது உடல், அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக அவர்கள், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, ராஜகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜகோபால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், திருநாவலூரில் இருந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் ராஜகோபால் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலுக்கு மங்கலட்சுமி என்ற மனைவியும், கவாஸ்கர் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story