தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழைதென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
ஏரலில் மதியம் 1.45 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1¼ மணி நேரம் நீடித்த மழையால் ஏரல் மெயின் பஜார், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளிலும் மதியம் பலத்த மழை பெய்தது.
மரங்கள் முறிந்தனதென்திருப்பேரை–குரங்கணி ரோட்டில் மாந்தோப்பில் நின்ற 2 மாமரங்களின் கிளைகள் முறிந்து, சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதேபோன்று ஏரல்–மங்களகுறிச்சி ரோட்டில் சாலையோரம் நின்ற பட்டுப்போன தேக்கு மரம் பலத்த மழையில் வேரோடு சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.