வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட பெங்களூரு கார் வியாபாரி, கடத்தியவருடன் போலீஸ் நிலையம் வந்தார்
ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பெங்களூரு கார் வியாபாரி, தன்னை கடத்திய நண்பருடன் போலீஸ் நிலையம் வந்தார். விசாரணைக்கு பிறகு இருவரும் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
பெங்களூருவைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது 36). இவர், கார்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மாவதி (34). வேலை விஷயமாக சென்னை வந்த அருண்குமார், விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 13–ந்தேதி இரவு உறவினர் வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் பெங்களூருவில் உள்ள பத்மாவதியை தொடர்புகொண்ட அருண்குமாரின் நண்பரான சத்தியநாராயணன் என்பவர், ‘‘உனது கணவரை நான் கடத்தி வைத்து உள்ளேன். ரூ.20 லட்சம் கொடுத்தால் அவரை உயிருடன் விடுவேன். போலீசுக்கு தகவல் கொடுத்தால் அவரை கொலை செய்து விடுவேன்’’ என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மாவதி, பெங்களூருவில் இருந்து சென்னை வந்து, தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து, கடத்தப்பட்ட அருண்குமாரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெங்களூரு கார் வியாபாரி அருண்குமார் மற்றும் அவரை கடத்திய நண்பரான சத்தியநாராயணன் இருவரும் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் வாங்கி தரும்படி தனது நண்பர் அருண்குமாரிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய அவர், இதுவரையிலும் சத்தியநாராயணனுக்கு கார் வாங்கிக்கொடுக்காமலும், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் காலம் கடத்தி வந்து உள்ளார். இதனாலேயே சத்தியநாராயணன், கார் வாங்குவதற்காக தான் கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதற்காக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அருண்குமாரை கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தப்பட்ட அருண்குமார் மீது பணம் மோசடி வழக்கும், அவரை கடத்திய சத்தியநாராயணன் மீது ஆள் கடத்தல் வழக்கும் என 2 பேர் மீதும் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இருவரையும் நீதிபதி ஜாமீனில் விடுதலை செய்தார்.