ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டியில் பூக்கள் விலை கடும் உயர்வு
ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஆயுத பூஜையும், நாளை (வெள்ளிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை கழுவி சுத்தம் செய்து, ஆயுத பூஜை கொண்டாட தயாராகி உள்ளனர். இன்றைய தினம் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி, வாகனங்களுக்கு சந்தனம் தெளித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். மேலும் வீடுகள் பூக்களால் அலங்கரிக்கப்படும். பூஜையில் பூக்கள், பழங்கள் கட்டாயம் இடம்பெறும்.
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால், ஆயுத பூஜைக்கு அவசியமான மல்லி, சாமந்தி, முல்லை, அரளி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் விளைவிக்கப்படுவது இல்லை. எனவே, நீலகிரிக்கு தேவையான பூக்கள் கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு தினமும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி ஊட்டிக்கு பூக்கள் வரத்து அதிகரித்து இருக்கிறது. தொடர் மழை பெய்ததால் பூக்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பூக்களின் விலை வழக்கத்தை விட உயர்ந்து உள்ளது. ஒரு முழம் மல்லிகை பூ-ரூ.60, பிச்சி பூ-ரூ.60, சாமந்தி பூ-ரூ.60, கதம்பம்-ரூ.30, அரளி-ரூ.40, சிறிய மாலை-ரூ.120, பெரிய மாலை-ரூ.250, கார் மாலை-ரூ.600, லாரி, பஸ் மாலை-ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் மல்லிகை பூ ஒரு முழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற பூக்களின் விலை தற்போது ரூ.20 வரை அதிகரித்து உள்ளது. பூக்கள் விலை உயர்வால், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஊட்டி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருந்தாலும் பொதுமக்கள் பூக்கள், வாழைக்கன்றுகள், மா இலை, அவல், பொறி, தேங்காய், எலுமிச்சப்பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை காண முடிந்தது. ஒரு கிலோ மாதுளை பழம்-ரூ.100, ஆரஞ்சு-ரூ.80, கொய்யாப்பழம்-ரூ.80, ஆப்பிள்-ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story