பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:45 PM GMT (Updated: 17 Oct 2018 7:32 PM GMT)

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் நாஞ்சில்பாலு தலைமை தாங்கி பேசினார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கோவி.சேதுராமன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலு வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

ஐப்பசி மாதம் 1-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை மயிலாடுதுறை துலா கட்டத்தில் துலா உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித் துறையினரை கேட்டு கொள்வது. மயிலாடுதுறையில் ஐப்பசி மாத கோவில் திருவிழாவை முன்னிட்டு சின்னக்கடை தெருவில் அரசியல் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் துறை அனுமதி வழங்கக்கூடாது. மழைக்காலத்தை முன்னிட்டு சாலையோரங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை சரி செய்ய வேண்டும். டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவாமல் இருக்க தினமும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் ஆங்காங்கே குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே, நகர் முழுவதும் பாதாள சாக்கடையை மறுசீரமைப்பு செய்ய ஆகும் தொகையை கணக்கிட்டு அதனை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க அரசை கேட்டு கொள்வது. மயிலாடுதுறையை சேர்ந்த டிரைவர் ஒருவர் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை வசதியுடன் இருதய ஆபரேஷன் செய்து கொண்டார். இதற்காக பிரதமர் நரேந்திரமோடியின் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர தலைவர் மோடிகண்ணன் நன்றி கூறினார்.

Next Story