திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறால் பரபரப்பு


திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:45 AM IST (Updated: 18 Oct 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து புறப்பட்ட துபாய் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

திருச்சி,

திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் அதிகாலை 1.10 மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது. கடந்த 12-ந்தேதி அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 130 பயணிகள், 6 ஊழியர்களுடன் புறப்பட்டது.

ஓடு பாதையில் இருந்து புறப்பட்டு விமானம் மேலே கிளம்பிய போது ஆண்டெனா, விமானநிலைய சுற்றுச்சுவர் ஆகியவற்றில் மோதி விட்டு பறந்தது. விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள், ஊழியர்கள் என 136 பேர் உயிர்தப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரக விபத்து விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானநிலையத்தில் தொடர்ந்து நேற்றும் விசாரணை நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்குவதற்குள் கடந்த 14-ந்தேதி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் ஏ.சி. இயங்காததால் அந்த விமானம் உடனடியாக ஓடுபாதையில் திருப்பி இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதிலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த 2 சம்பவங்களை தொடர்ந்து திருச்சி விமானநிலையத்தில் நேற்று அதிகாலை துபாய் விமானத்தில் மீண்டும் ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சி விமானநிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 1.10 மணி அளவில் துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 114 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானம் ஓடு பாதையை நோக்கி புறப்பட தொடங்கியது.

விமானம் புறப்பட்டு ஓடு பாதையில் சென்ற நிலையில் விமானத்தின் முகப்பு விளக்குகள் திடீரென எரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். பின்னர் விமானத்தை ஓடுபாதையில் இருந்து விலக்கி ஏப்ரான் பகுதியில் நிறுத்தினார். புறப்பட்ட விமானம் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்களும் பதறினர். விமானத்தில் முகப்பு விளக்குகள் எரியாதது பற்றி விமானி, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்றார்.

இதையடுத்து விமானநிலையத்தில் இருந்து தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் முகப்பு விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகளிடம் நடந்த சம்பவத்தை கூறி விமானம் இயக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டனர்.

பயணிகள் துபாய் செல்ல வசதியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதுவரை ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஷார்ஜா சென்ற விமானத்தில் பயணிகள் 30 பேர் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் திருச்சியில் ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் முகப்பு விளக்குகள் திடீரென எரியாததற்கு காரணம் அதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என தொழில்நுட்ப ஊழியர்கள் கருதினர். தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டும் முடியவில்லை. இதனால் விமானம் திருச்சியிலே நிறுத்தி வைக்கப்பட்டது.

விமானத்தின் முகப்பு விளக்குகள் எரியாததை தொடக்க நிலையிலேயே விமானி கண்டுபிடித்து சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருக்கும் போது முகப்பு விளக்குகள் எரியாமல் போனால் நிலைமை மோசமாகி இருக்கும்.

இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் நடந்து வரும் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

துபாய் விமானத்தில் முகப்பு விளக்குகள் நேற்று மாலை சரி செய்யப்பட்டன. இதையடுத்து அந்த விமானம் மாலை 5.40 மணி அளவில் துபாய் புறப்பட்டு சென்றது. இதில் 7 பயணிகள் மட்டும் பயணம் செய்தனர். ஓட்டலில் தங்கியிருந்த மற்ற பயணிகள் டிக் கெட்டை ரத்து செய்து விட்டு சென்னையில் இருந்து துபாய் செல்ல புறப்பட்டு சென்றனர்.

Next Story