முதல்-அமைச்சர் அறிவித்தபடி திருச்சி கொட்டப்பட்டில் பஸ் நிலையம் அமைக்கப்படாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி


முதல்-அமைச்சர் அறிவித்தபடி திருச்சி கொட்டப்பட்டில் பஸ் நிலையம் அமைக்கப்படாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி
x
தினத்தந்தி 18 Oct 2018 4:30 AM IST (Updated: 18 Oct 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப் படும் என்ற முதல்- அமைச்சரின் அறிவிப்பு ஒரு ஆண்டாகியும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருச்சி,

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பது திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கனவாகும். ஆம்...திருச்சியை விட சிறிய நகரங்களில் கூட ஒருங்கிணைந்த பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்ட நிலையில் திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படாதது பெரும்குறையாக இருந்து வருகிறது. தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியில் பல மடங்கு அதிகரித்து உள்ள வாகன பெருக்கத்தினை மத்திய பஸ் நிலையமும், சத்திரம் பஸ் நிலையமும் சமாளிக்க முடியாமல் திணறி வருவதால் மக்கள் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பது தான். கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க காவிரி கரையில் தேவதானம், கொட்டப்பட்டு குளம், பிராட்டியூர் உள்ளிட்ட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சியின் பரிசீலனையில் இருந்தன. ஆனால் பின்னர் அவை நீதிமன்ற வழக்குகள், காவிரி கரை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

கடந்த தி.மு.க. ஆட்சியில் திருச்சி அருகே பஞ்சப்பூர் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது துணை முதல் - அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இரண்டு முறை திருச்சிக்கு வந்து ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைவதற்கான இடத்தை பார்வையிட்டார். அரசு நிலம் தவிர தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்துவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நேரத்தில் 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த திட்டமும் அப்படியே கைவிடப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா முதல் - அமைச்சராக இருந்த போது திருச்சி கொட்டப்பட்டு என்ற இடத்தில் மத்திய சிறை அருகே உள்ள சுமார் 100 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி வெளிப்படையான அரசு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் நிர்வாக ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே மைதானத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசியபோது திருச்சி கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ‘திருச்சி மாநகராட்சிக்கு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஜெயலலிதா அறிவிப்புக்கு இணங்க திருச்சி மாநகராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கலந்தாலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்ட அறிக்கையினை தற்போது தொழில் நுட்ப மற்றும் நிதி மதிப்பீடு கூர்ந்தாய்வு குழு உரிய வணிக முறையை முடிவு செய்து செயல்படுத்தப்படும்’ என்றார்.

அரசு விழாவில் முதல் - அமைச்சர் அறிவித்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் அந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக மாநகராட்சியோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரை எந்த ஒரு ஆலோசனை கூட்டமோ அல்லது நிர்வாக ரீதியாக ஏதாவது நடவடிக்கையோ எடுத்ததாக தெரியவில்லை.

சொல்லப்போனால் ஒரு துரும்பை கூட யாரும் எடுத்து போடவில்லை. இதனால் முதல் -அமைச்சரின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக காற்றில் கரைந்து போய்விட்டதா? அல்லது திட்டம் கைவிடப்பட்டதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் நகருக்கு வெளியே ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைக்கப்பட்டால் தான் திருச்சி நகரம் விரிவடையும், அத்துடன் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

எனவே கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றால் மாற்று இடத்தில் அதனை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்து அடுத்த வாரம் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வரும்போது அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

Next Story