ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பெரம்பலூரில் மக்கள் கூட்டம் அலைமோதியது


ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பெரம்பலூரில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 18 Oct 2018 4:00 AM IST (Updated: 18 Oct 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூரின் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்,

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையின் போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபடுவார்கள். இதனால் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ்நிலையம், காமராஜர் வளைவு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நேற்று நடந்தது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சிறிய வாழைக்கன்று ஒரு ஜோடி- ரூ.40-க்கும், பெரிய வாழைக்கன்று ஒரு ஜோடி- ரூ.60-க்கும், 2 லிட்டர் உலக்கு பொரி-ரூ.15-க்கும், ½ லிட்டர் உலக்கு அவல்-ரூ.20-க்கும், பொட்டு கடலை ½ லிட்டர் உலக்கு-ரூ.40-க்கும், திருஷ்டி பூசணிக்காய் பெரியது ரூ.100-க்கும், சிறியது ரூ.40-க்கும் விற்பனையானது. 1 டஜன் வாழைப்பழங்கள் தரத்திற்கு ஏற்றாற்போல் ரூ.50 லிருந்து விற்கப்பட்டது. பூக்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே இருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் கிலோ ரூ.140-க்கும், ஆரஞ்சு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜைக்கு பெரும்பாலானோர் பயன்படுத்தும் செவ்வந்திப்பூ விலையும் அதிகமாகவே இருந்தது. அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராகவே நடந்தது. சரஸ்வதி சாமி படங்களும் அளவிற்கு ஏற்றார் போல் சாலையோர கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பழைய பஸ் நிலையம் அருகே கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

Next Story