ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் பூ, பழங்கள் விலை அதிகரிப்பு


ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் பூ, பழங்கள் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:45 PM GMT (Updated: 17 Oct 2018 9:07 PM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழங்களின் விலை அதிகரித்து இருந்தது.

திருச்சி,

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்களை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. தீயவை அழிந்து நல்லவை பெற வெற்றி பெற்ற நாளாக ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

தொழிற்சாலைகள் மட்டுமின்றி வீடுகளிலும் சிறிய அளவில் பூஜை செய்து ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இன்று(வியாழக்கிழமை) ஆயுதப்பூஜை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அவல், பொரி, சுண்டல், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று காலை முதலே ஆயுத பூஜைக்கான பொருட்கள் வாங்கிட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு டன் கணக்கில் பூக்கள் மற்றும் வெள்ளை பூசணிக்காய், தேங்காய், பழங்கள் மற்றும் வாழைத்தார் குவிக்கப்பட்டிருந்தன. எட்டரை, குழுமணி, மணப்பாறை, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 டன் பூக்கள் காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்கு வந்தன. காந்தி மார்க்கெட்டில் பூ விற்பனை செய்யும் இடம், பழங்கள் மற்றும் வாழைத்தார் விற்பனை செய்யும் இடங்களில் பூஜை பொருட்களை வாங்கி திரளானவர்கள் கூடினர்.

மேலும் மார்க்கெட்டை சுற்றி தற்காலிக கடைகள் போடப்பட்டு அவல், பொரி, பொரிகடலை, வேர்க்கடலை, வாழை இலை விற்பனையும் அமோகமாக நடந்தது.

ஆயுத பூஜையையொட்டி, பூக்கள் விலை வழக்கத்தை விட நேற்று அதிகரித்து இருந்தது. மல்லிகை கிலோ ரூ.400, சாமந்தி கிலோ 150 முதல் ரூ.200 வரையிலும், முல்லை கிலோ ரூ.500, ஜாதிப்பூ கிலோ ரூ.400, அரளிப்பூ கிலோ ரூ.300 எனவும் விற்கப்பட்டது. வெள்ளை பூசணி கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகி வந்தது நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.15 என விற்பனை ஆனது.

அதுபோல வாழைத்தார் பூவன் பழம் ரூ.150 முதல் ரு.400 வரையும், ரஸ்தாளி ரூ.250 முதல் ரூ.500 வரையிலும், செவ்வாழை ரூ.200 முதல் ரூ.600 வரையிலும், பச்சை வாழை ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.200 முதல் ரூ.700 வரையிலும் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை ஆனது.

கிலோ ரூ.50-க்கு விற்ற மாதுளம் பழம் ரூ.60-க்கும், ரூ.30-க்கு விற்ற சாத்துக்குடி ரூ.50-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையிலும், கிலோ ரூ.60-க்கு விற்ற திராட்சை ரூ.100-க்கும் விற்பனை ஆனது. பொரி லிட்டர் ரூ.10-க்கும், அவல் ¼ கிலோ ரூ.30 என்றும், சிறிய அளவிலான பாக்கெட் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சுண்டல் கிலோ ரூ100 முதல் ரூ.120 வரையிலும் விற்கப்பட்டது. இதுதவிர விற்பனைக்காக தேங்காய் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்தன. தேங்காய் சற்று விலை குறைந்திருந்தது. தரத்திற்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் விலை நிர்ணயித்து விற்கப்பட்டன. வாழை இலை ஒன்று ரூ.4-க்கு விற்கப்பட்டது. அதுபோல வாழக்கன்று ஜோடி ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்பட்டது.

காந்தி மார்க்கெட்டில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியதையொட்டி, அப்பகுதியில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மார்க்கெட்-தஞ்சை ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சரி செய்தனர்.

Next Story