கெலமங்கலத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


கெலமங்கலத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 11:00 PM GMT (Updated: 17 Oct 2018 9:53 PM GMT)

கெலமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பஸ் நிலையம் அருகில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் சையத் இப்ராகிம், துணை செயலாளர் கோணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், மேற்கு மாவட்ட பொருளாளர்கள் மாரியப்பன், கே.மாரியப்பன், ஒன்றிய தலைவர் சரவணன், செயலாளர் ராமமூர்த்தி, பிரபாகர் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கெலவரப்பள்ளி அணைக்கால்வாய் கார்கண்டபள்ளி, கொத்தப்பள்ளி, பைரமங்கலம், சின்னட்டி வழியாக சனத்குமார் ஏரிக்கு தண்ணீர் செல்ல கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 80 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இயற்கை பேரிடரின் போது சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், கொப்பரை தேங்காய் ரூ.100 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story