உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மூலம் வர்த்தக நிறுவனங்கள் மீது 128 வழக்குகள் பதிவு - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மூலம் வர்த்தக நிறுவனங்கள் மீது 128 வழக்குகள் பதிவு - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:35 PM GMT (Updated: 17 Oct 2018 10:35 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மூலம் பேக்கரி, ஓட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மீது 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில், உணவு வணிக வர்த்தக அமைப்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான 2-வது காலாண்டு வழிகாட்டுதல் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது.

இதில் கலெக்டர் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு கலப்படம் தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஓட்டல்கள், பேக்கரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்து வரும் ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக் இல்லா திருப்பூர் மாவட்டத்தை உருவாக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக இறைச்சி கடை உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல்கள் சங்க உரிமையாளருக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு துணிப்பை மற்றும் காகித கப் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

நடவடிக்கை

மேலும், உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்பட்ட ஆய்வில் 212 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 128 பேக்கரி, ஓட்டல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் உணவு பொருட்களான பால் சார்ந்த பொருட்கள் மாதிரி எடுக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோல் கலப்பட டீத்தூள், 1,500 கிலோ பான் மசாலா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா விற்பனையை நிறுத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 162 உணவு வணிகர்கள் உள்ளனர். இதில் 18 ஆயிரத்து 625 பேர் உரிமம் பெற்றுள்ளனர். மீதி உள்ள உணவு வணிகர்கள் உரிமம், பதிவு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். தள்ளுவண்டி கடைக்காரர்கள் சுத்தமான முறையில் உணவை வழங்க வேண்டும். இறைச்சி விற்பனை செய்கிறவர்கள் ஆடு வதைக்கூடத்தில் கால்நடை மருத்துவரின் சான்றிதழுடன் வதை செய்ய வேண்டும். இதனை மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் எந்த வித கலப்படமின்றி விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கலப்பட டீத்தூள், பிளாஸ்டிக் பை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வது தெரிந்தால், பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், வணிக உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், திருப்பூர் ஓட்டல் சங்க நிர்வாகிகள் உணவு நிறுவனங்களில் பார்சல் வாங்க பாத்திரங்கள் கொண்டு வரும் நுகர்வோருக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்குவதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story