மும்பையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை


மும்பையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை
x
தினத்தந்தி 17 Oct 2018 11:03 PM GMT (Updated: 17 Oct 2018 11:03 PM GMT)

மும்பையில் கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா திடீர் ஆலோசனை நடத்தினார். மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா கட்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சிவசேனாவுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக மந்திரி சபை விரிவாக்கம் குறித்த பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. தற்போது மராட்டியத்தில் 39 மந்திரிகள் உள்ளனர். மராட்டியத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து 42 மந்திரிகளை நியமித்து கொள்ள முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்தநிலையில் அமித்ஷா நேற்று முன்தினம் மாலை திடீரென மும்பை வந்தார்.

அவர் வில்லேபார்லேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டம் குறித்து பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

அமித்ஷாவின் ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. பல மூத்த தலைவர்களுக்கு அமித்ஷா மும்பை வந்தது கூட தெரியவில்லை. எனவே இந்த கூட்டம் கட்சியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக நடக்கவில்லை என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதி அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மந்திரி சபை விரிவாக்கம் கட்சிக்கு எந்த வகையில் பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பால்கரில் நவம்பர் 26-ந் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ். செயற்குழு உறப்பினர்கள் மாநாடு குறித்தும் பேசப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் கூறுகின்றன.

இந்த கூட்டத்தில் மூத்த பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story