திருச்சியில் பயங்கரம்: டிரைவர் கடத்தி படுகொலை - உடலை மூட்டையாக கட்டி ஆட்டோவில் போட்டுச்சென்ற கொலையாளிகள்
திருச்சியில் டிரைவரை கடத்தி, குத்திக்கொன்று உடலை மூட்டையாக கட்டி, ஆட்டோவிலேயே கொலையாளிகள் போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி,
திருச்சி உறையூர் ராமலிங்கநகர் பகுதியில் கோணக்கரை சாலையில் இருந்து பிரியும் முட்புதர்கள் நிறைந்த கார்மெல் கார்டன் பகுதியில் பூட்டிய வீடு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற சிலர், ஆட்டோவை பார்த்தனர்.
அப்போது ஆட்டோவின் உட்பகுதி முழுவதும் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. ஆட்டோவின் பின்பகுதியில் ‘லக்கேஜ்’ வைக்கும் இடத்தில் ரத்தக்கறை படிந்திருந்த நைலான் சாக்குமூட்டை ஒன்று கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அதில் ஒருவரை கொன்று சாக்குமூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து உறையூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ராமச்சந்திரன், உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் கார்மல் கார்டன் பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு ஆட்டோவில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பிணத்தை இறக்கி போலீசார் பார்வையிட்டனர். அப்போது உடலில் மார்பு, வயிறு, விலாப்பகுதி, முதுகுப்பகுதி என 13 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்டவரின் கால்கள் மடக்கப்பட்டு, இடுப்புடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. மேலும் கைகளும் பின்னால் கட்டப்பட்டிருந்தன. எனவே, அவரை கடத்திச்சென்று வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, உடலை சாக்குமூட்டையாக கட்டி அங்கு போட்டு விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
ஆட்டோவின் முன்பகுதியில், உரிமையாளர் பெயர் துரைராஜ் (வயது45), பணிக்கன் தெரு, உறையூர், திருச்சி என எழுதப்பட்டிருந்தது. மேலும் ஆட்டோவின் முகப்பு கண்ணாடியில் டி.தானேஷ் என பெரிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இவற்றைக் கொண்டு விசாரித்ததில், கொலை செய்யப்பட்டது துரைராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி லலிதா, 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகன் தானேஷ் ஆகியோரை உடலை அடையாளம் காண்பிப்பதற்காக போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கொலையுண்டு கிடப்பது தனது கணவர் துரைராஜ் தான் என அடையாளம் காட்டிய லலிதா, உடலைக்கண்டு கதறி அழுதார். போலீசார் லலிதாவிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:-
துரைராஜ் தனக்கு சொந்தமான ஆட்டோவை ‘ஓலோ’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவரே ஓட்டி வந்துள்ளார். ஏற்கனவே, ரியல் எஸ்டேட் தொழில் செய்து, அதனால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அத்தொழிலில் இருந்து விடுபட நினைத்துள்ளார். இருப்பினும் வீடு, மனை யாரேனும் வேண்டும என்று கேட்டால், அந்த வேலையையும் செய்து கொடுத்து வந்துள்ளார். இதனால், பணம் கொடுக்கல்-வாங்கலில் சிலருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஆயுதபூஜை அன்று காலையில் வீட்டில் இருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு சவாரிக்கு சென்றார். மாலை 6 மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அவரது செல்போனுக்கு, மனைவி லலிதா தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். அப்போது துரைராஜ் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இரவு வரையும் வராததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்திலேயே இருந்துள்ளனர். நேற்று காலை போலீசார் வீட்டிற்கு வந்து விசாரித்தபோது தான் கணவர் துரைராஜ் கொலையுண்டது தெரியும் என லலிதா கூறி இருக்கிறார்.
ஆயுதபூஜை அன்று நண்பர்களுடன் துரைராஜ் ஆட்டோவில் சென்று இருக்கலாம் எனவும், இரவு வேளையில் நண்பர்களுடன் சேர்ந்து இருந்த போது அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு கத்தியால் குத்தி கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது. இருப்பினும் துரைராஜை கொன்ற கொலையாளிகள், உடலை மூட்டையாக கட்டியதுடன் போலீசார் துப்பறிந்து விடாமல் இருக்க ஆட்டோ முழுமைக்கும் மிளகாய்பொடி தூவி இருப்பதால் திட்டமிட்டே அவரை கடத்திச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்திருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.
இருப்பினும் கொலையாளிகள் யார்?, எதற்காக துரைராஜ் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு உண்மையாக காரணம் தெரியவில்லை. ஏற்கனவே, பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக உறையூர் போலீஸ் வரை புகார் சென்றதாக கூறப்படுகிறது. இவை அனைத்திற்குமான விடை கொலையாளிகளை அடையாளம் கண்ட பின்னரே தெரியவரும்.
மேலும் ஆட்டோவில் உள்ள கைரேகைகளை பதிவு செய்வதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் நிபுணர்கள் வந்தனர். அவர்கள் ஆட்டோவில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அத்துடன் போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. ஆட்டோ முழுவதும் மிளகாய்பொடி தூவப்பட்டதால் அதனால் சரியாக மோப்பம் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் நைலான் சாக்குப்பை உதவியுடன் நாய் மோப்பம் பிடித்தது. ஆட்டோ நின்ற இடத்தில் இருந்து அருகில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடம் வரை 3 முறை சென்று திரும்பியது.
எனவே, கொலையாளிகள் பள்ளிவரை நடந்து சென்று அங்கிருந்து வேறு ஆட்டோ அல்லது வாகனத்தில் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. பின்னர், துரைராஜ் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி உறையூர் பகுதியில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story