திருவட்டார் அருகே: வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை


திருவட்டார் அருகே: வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 Oct 2018 3:00 AM IST (Updated: 20 Oct 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவட்டார், 

திருவட்டார் அருகே கண்ணணூர் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி எலிசபெத் (வயது 60). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள். மகன் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தங்கப்பன் இறந்து விட்டதால் எலிசபெத் தனது மருமகளுடன் வசித்தார்.
இந்த நிலையில் எலிசபெத் தனது மருமகளை 2-வது பிரசவத்திற்காக சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அருகில் இருந்து கவனித்து வந்தார். இதனால் வீடு பூட்டிய நிலையில் இருந்தது.

நேற்று முன்தினம் எலிசபெத் வீடு திரும்பினார். அவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை, ரூ.57 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், எலிசபெத் இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது, மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு அதன் மூலம் மர்ம ஆசாமி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அங்கு மர்மஆசாமியின் கைரேகை பதிவாகியிருக்கிறதா? என்பதை சோதனை செய்தனர். அப்போது டி.வி.யில் மர்மஆசாமியின் கைரேகைபதிவாகியிருந்தது. இதனை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர்.

வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த டி.வி.யை மர்ம ஆசாமி எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளான். ஆனால் அது முடியாததால் டி.வி.யை திருடும் முயற்சியை கைவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story