கடன் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் நூதன மோசடி; பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


கடன் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் நூதன மோசடி; பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Oct 2018 4:15 AM IST (Updated: 20 Oct 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கடன் தருவதாக கூறி கட்டுக்கட்டாக கலர் தாள்களை கொடுத்து தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை,

நாகப்பட்டினம் அருகே உள்ள சீர்காழியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 63), தொழில் அதிபர். இவர் வெளிநாட்டிலும் தொழில் செய்துவருவதாக கூறப்படுகிறது. தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக நாகை செல்வம் என்பவரை தொடர்புகொண்டு ரூ.25 கோடி கடன் கேட்டார்.

அதற்கு அவர், அருந்ததி என்ற பெண் தனியார் நிதிநிறுவனம் மூலம் கடன் கொடுத்து வருகிறார் என்று அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். அந்த எண்ணை தொடர்புகொண்டு வரதராஜன் கடன் கேட்டபோது அவரும் கொடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் அருந்ததியை திருச்சியில் சந்தித்து பேசியபோது, ரூ.25 கோடி கடனுக்கு ஆவண செலவாக ரூ.30 லட்சம் ஆகும் என்றார். அதற்கு வரதராஜன் ஒப்புக்கொண்டார்.

அருந்ததி தரப்பினர் மதுரை வந்து ரூ.30 லட்சத்தை கொடுத்துவிட்டு முதல் தவணை பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். அதை நம்பி வரதராஜன் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வந்து தங்கினார். அந்த ஓட்டலுக்கு அருந்ததி தன்னுடன் ஹரி, கவுதம் என்ற 2 பேரை அழைத்துவந்தார். அங்கு அவர்கள் முதல் தவணையாக ரூ.1 கோடியே 40 லட்சம் கொடுப்பதாகவும், விரைவில் மீதி பணத்தை கொடுப்பதாகவும் கூறினர். கார் நிறுத்தும் இடத்திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் வரதராஜனிடம் ரூ.30 லட்சத்தை பெற்றுக்கொண்டு, அவரிடம் ஒரு சூட்கேசை திறந்து காண்பித்தனர். அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் இருப்பது தெரிந்தது. அவர்கள் பணம் இருந்த சூட்கேசை கொடுத்துவிட்டு காரில் சென்றுவிட்டனர். பின்னர் வரதராஜன் சூட்கேசை திறக்க முயன்றபோது ‘நம்பர் லாக்’ போட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர் போன் மூலம் அவர்களை தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை.

அவர் சிரமப்பட்டு சூட்கேசை திறந்து பார்த்தார். அதில் ரூ.28,200 மட்டும் நல்ல நோட்டுகள் இருந்தன. மற்ற அனைத்தும் கட்டுக்கட்டாக கலர் தாளும், 2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் தாள்கள் 2 கட்டும் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பணம் கொடுத்தவர்களை போனில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இதுதொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அருந்ததி, கவுதம், ஹரி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story