காதலை துண்டித்ததால் ஆத்திரம் இளம்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டல் வாலிபர் கைது
காதலை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதலியுடன் சேர்ந்து தான் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மானம்பதி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 25). இவர் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த 20 வயதான பட்டதாரி பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த பெண் சண்முகசுந்தரத்தை காதலிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அந்த பெண்ணுடன் சேர்ந்து தான் எடுத்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக அவரது பெற்றோரிடம் காட்டி மிரட்டி உள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்களை பரவ விட்டுள்ளார்.
இது குறித்து அந்த பெண் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சண்முகசுந்தரம் அந்த பெண்ணுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகசுந்தரம் மற்றும் அவரது உறவினரான பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த பாபு (45), ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.