திருப்பூரில் சொத்துவரி உயர்வை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் 23–ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பனியன் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன் வரவேற்றார். நிர்வாகிகள் நேமிநாதன், சாந்தாமணி, வடிவேல், சக்திவேல், சம்பத், ரத்தினசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரியை உயர்வு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. வரி சீரமைப்பு என்ற வகையில் நடைமுறையில் உள்ள சொத்துவரியில் பல மடங்கு உயர்வு செய்து மக்களை உடனடியாக வரியை கட்ட வேண்டும். தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வை மக்கள் மீது திணிப்பதை கண்டித்தும், வரி உயர்வை உடனடியாக நிறுத்தக்கோரியும், வரி உயர்வு நோட்டீஸ் வழங்குவதை நிறுத்தக்கோரியும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வருகிற 23–ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். இதில் திரளானவர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.