சிகரெட் தர மறுத்ததால் பெட்ரோல் ஊற்றினர்: தொழிலாளி உடலில் தீப்பிடித்து படுகாயம், 2 பேர் கைது


சிகரெட் தர மறுத்ததால் பெட்ரோல் ஊற்றினர்: தொழிலாளி உடலில் தீப்பிடித்து படுகாயம், 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2018 11:45 PM GMT (Updated: 20 Oct 2018 6:48 PM GMT)

சென்னை திருவான்மியூரில், சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றியதால் தொழிலாளி உடலில் தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). அதேபோல் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் விஜயராஜ் (30). நண்பர்களான இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே ஆட்டோவுடன் நின்றிருந்தனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது நடைபாதையில் தங்கியுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (50)என்பவர் சிகரெட் பிடித்தபடி இருந்தார். அதைகண்ட நண்பர்கள் இருவரும் கிருஷ்ணமூர்த்தியிடம் அந்த சிகரெட்டை கேட்டு தகராறு செய்தனர்.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி, சிகரெட் தரமறுத்து இருவரையும் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மற்றும் விஜயராஜ் இருவரும் ஆட்டோவில் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து கிருஷ்ணமூர்த்தி மீது ஊற்றினர்.

அப்போது அவரது கையில் வைத்திருந்த சிகரெட் நெருப்பில் பெட்ரோல் பட்டு, அவர் உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தி மீது எரிந்த தீயை அணைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவான்மியூர் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் கோவிந்தராஜ் மற்றும் விஜயராஜை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல், இருவரையும் கைது செய்தார். அவர்கள் வந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story