கும்மிடிப்பூண்டி அருகே மர்மகாய்ச்சலால் பள்ளி மாணவன் அவதி; சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
கும்மிடிப்பூண்டி அருகே மர்மகாய்ச்சலால் பள்ளி மாணவன் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருபவன் அரிபாபு (வயது 11). கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக அரிபாபு அவதிப்பட்டு வந்தான். ஈகுவார்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவனுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது.
அப்போது மாணவனுக்கு மர்மகாய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது. இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டதால், அரிபாபுவை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பலர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வருவதால், சித்தராஜகண்டிகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.