அயோடின் கலக்காத உப்பு விற்றால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை


அயோடின் கலக்காத உப்பு விற்றால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் அயோடின் கலக்காத உப்பை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகூர்,

சர்வதேச அயோடின் குறைபாடு நீக்கல் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் நாகூர் மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடைகளில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது மளிகை கடைக்காரர்களிடம் பரிசோதனை செய்வதற்காக அயோடின் கண்டறியும் வேதிப்பொருள் குப்பியை வழங்கினார். மேலும் ஆய்வுக்கு அனுப்ப விற்பனைக்காக வைத்திருந்த உப்பை மாதிரி எடுத்து கொண்டனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் கூறியதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சரியான அளவு அயோடின் கலந்த உப்பை மளிகைகடை மற்றும் பெட்டிகடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

இதில் முழுமையான விவரமுள்ள பாக்கெட்டுகளில் மட்டுமே உப்பு விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் தயாரிப்பு உரிம எண் அச்சடிக்கப்பட்டுள்ளதா? என கவனித்து பொதுமக்களுக்கு உப்பை வழங்க வேண்டும்.

நாகூர் மற்றும் நாகை பகுதிகளில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story