கீழப்பெரம்பலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? 28 ஆண்டுகளாக போராடும் பொதுமக்கள்


கீழப்பெரம்பலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? 28 ஆண்டுகளாக போராடும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பெரம்பலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி 28 ஆண்டுகளாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துடன் பெரம்பலூர் இணைந்து இருந்த போதே, கீழப்பெரம்பலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முறையான ஆவணங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து, கீழப்பெரம்பலூர் ஊராட்சி நிர்வாகம் தீர்மானமும் நிறைவேற்றியது. இதற்கான பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்கள் சார்பில் அரசுக்கு செலுத்தப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போது கீழப்பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் 18 கி.மீ. தூரம் பயணம் செய்து லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை தேவைப்படும் போது சிலருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தும் வருகின்றனர்.

கீழப்பெரம்பலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுத்தால், கீழப்பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான வசிஷ்டபுரம், மேட்டுக்காலிங்கராயநல்லூர், பள்ளக்காலிங்கராயநல்லூர், வேள்விமங்கலம், வீரமாநல்லூர், கீரனூர், வயலப்பாடி, வயலூர், கைப்பெரம்பலூர், கருப்பட்டாங்குறிச்சி, கிழுமத்தூர், அகரம் சீகூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கீழப்பெரம்பலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story