பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மீன்வளர்ப்போர் நீலப்புரட்சி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மீன்வளர்ப்போர் நீலப்புரட்சி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Oct 2018 3:45 AM IST (Updated: 21 Oct 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மீன்வளர்ப்போர் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக புதிய மீன் பண்ணை குளங்கள், குட்டைகள் அமைத்தல் ஏற்கனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள், தொட்டிகளை சீரமைத்தல், நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, புதிய மீன்பண்ணை குளங்கள் மற்றும் குட்டைகள் அமைத்தல் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவின தொகையான ரூ.7 லட்சத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஏற்கனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள், தொட்டிகளை சீரமைத்தல் ஒரு எக்டேருக்கு ஆகும் செலவின தொகையான ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், 40 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படும். நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் மீன்வளர்ப்பிற்கு இடுபொருட்களுக்கு ஆகும் செலவினத்தொகையான ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் 40 சதவீதம் மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற பயனாளிகள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மீன்வளர்ப்போர் இந்த மாதத்திற்குள் அரியலூர், மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங் களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண் 234-ல் இயங்கும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விவரம் பெற்று பயனடையலாம்.

இந்த தகவல் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story