கோவை அருகே: குடிபோதையில் தகராறு; தொழிலாளி கொலை? நண்பரிடம் விசாரணை


கோவை அருகே: குடிபோதையில் தகராறு; தொழிலாளி கொலை? நண்பரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2018 2:30 AM IST (Updated: 21 Oct 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் நடைபெற்ற தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்று அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துடியலூர்,

கோவையை அடுத்த பன்னிமடை கொண்டசாமிநகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் சாலையோரம் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றினர். விசாரணையில், சாமிநாதன், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான கோகுல்ராஜ் (21), சுரேஷ் (24) ஆகியோருடன் சேர்ந்து மது குடிக்க சென்றது தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் 3 பேரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சாமிநாதன் கல்லை எடுத்துக் கொண்டு கோகுல்ராஜ் வீட்டுக்கு சென்று மீண்டும் அவருடன் தகராறு செய்துள்ளார்.

இந்தநிலையில்தான் சாமிநாதன் இறந்து கிடந்துள்ளார். எனவே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் கோகுல்ராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு நண்பர் சுரேசை போலீசார் தேடி வருகிறார்கள்.சாமிநாதனிடம் சில்வர் குடத்தை அடமானம் வைத்து கோகுல்ராஜ் கடனாக ரூ.300 வாங்கியதாகவும், அந்த குடத்தை திருப்பி கேட்டபோது கூடுதல்தொகையை சாமிநாதன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தான் சாமிநாதன் எதனால் மரணம் அடைந்தார் என்பது குறித்த விவரம் தெரியவரும் என்றனர் 

Next Story