பணம் எடுக்க உதவுவதுபோல் ஏ.டி.எம்.கார்டை மாற்றி பெண்ணிடம் நூதன மோசடி மர்ம நபருக்கு வலைவீச்சு


பணம் எடுக்க உதவுவதுபோல் ஏ.டி.எம்.கார்டை மாற்றி பெண்ணிடம் நூதன மோசடி மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 21 Oct 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே பணம் எடுக்க உதவுவதுபோல் ஏ.டி.எம்.கார்டை மாற்றி பெண்ணின் வங்கி கணக்கில் பணம் எடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவர், மணப்பாறையில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு நின்ற மர்ம நபர் ஒருவர் பணம் எடுத்து தருவதாக கூறி சித்ராவிடம் ஏ.டி.எம்.கார்டை கேட்டார். அவரிடம் சித்ரா ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். சிறிது நேரத்தில் பணம் இல்லை என்று அந்த நபர் சித்ராவிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார். சித்ராவும் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனால் சிறிது நேரத்தில் சித்ராவின் செல்போனுக்கு ரூ.25 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலமாக பணம் எடுத்ததற்கான குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்த போது அது போலியானது என்பதும், ஒரிஜினல் கார்டை மர்ம நபர் மாற்றிக் கொடுத்து நூதன முறையில் பணத்தை எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.


இதுகுறித்து மணப்பாறை போலீசில் சித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர் வையம்பட்டியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story