துறையூர் அருகே பழமையான வீட்டை இடித்த போது சிலைகள் கிடைத்தன


துறையூர் அருகே பழமையான வீட்டை இடித்த போது சிலைகள் கிடைத்தன
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே பழமையான வீட்டை இடித்த போது சிலைகள் கிடைத்தன.

துறையூர்,

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், மேலகுட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவரது மகன் சந்தானகிருஷ்ணன். இவர் தனது தந்தை இறந்த பிறகு சொந்த ஊரில் இருந்து குடும்பத்துடன் தர்மபுரிக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக துறையூரில் உள்ள வீடு பூட்டியே கிடந்தது.

 இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு துறையூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் அந்த பழமையான வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீடு சிதலமடைந்து இருந்ததால் இடிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டை இடித்தார். அப்போது வீட்டிற்கு அடியிலிருந்து சுமார் 2 அடி உயரமுள்ள 2 கற்சிலைகளும், சிறு, சிறு ஐம்பொன் சிலைகளும், மரத்தாலான சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்தன.


இதனையடுத்து அந்த சிலைகளையும், செப்பேடுகளையும் துறையூர் தாசில்தார் ரவிசங்கரிடம், மண்டல துணை தாசில்தார் தனலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், கிராம நிர்வாக அதிகாரி கயல்விழி ஆகியோர் முன்னிலையில் சுரேஷ் ஒப்படைத்தார். சிலைகளை பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுபற்றி உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தார்.

 25 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டில் கற்சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கிடைத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story