பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு நினைவஞ்சலி போலீஸ் சூப்பிரண்டு மலர்வளையம் வைத்து மரியாதை


பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு நினைவஞ்சலி போலீஸ் சூப்பிரண்டு மலர்வளையம் வைத்து மரியாதை
x
தினத்தந்தி 21 Oct 2018 11:00 PM GMT (Updated: 21 Oct 2018 6:48 PM GMT)

பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காவல்துறை பணியின்போது பல்வேறு காரணங்களால் மரணமடையும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை மரணமடைந்த போலீசாருக்கு நேற்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஜெகதீஸ்துரை கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்களை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வாறு கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 414 போலீசார் மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று முன்தினம் வேலூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கலந்து கொண்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அதிவீரபாண்டியன், ஆசைத்தம்பி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

மேலும் பணியின்போது மரணமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story