தத்தெடுத்த பெற்றோர் செலவுக்கு பணம் அனுப்பாததால் விரக்தி: தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை


தத்தெடுத்த பெற்றோர் செலவுக்கு பணம் அனுப்பாததால் விரக்தி: தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 2018-10-22T00:22:23+05:30)

கூத்தாநல்லூர் அருகே தத்தெடுத்த பெற்றோர் செலவுக்கு பணம் அனுப்பாததால் மனவேதனை அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை கீழத்தெருவை சேர்ந்தவர் முகமதுபாரூக். இவருடைய மனைவி ஆசியாநாச்சியா. இவர்கள் மரியாபர்வீன் (வயது16) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். முகமதுபாரூக்கும், ஆசியாநாச்சியாவும் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் தங்களுடைய வளர்ப்பு மகளான மரியாபர்வீனை, மரக்கடை கீழத்தெருவில் வசித்து வரும் ஆசியாநாச்சியாவின் தங்கை மும்தாஜ்பேகம் என்பவருடைய வீட்டில் விட்டு சென்றனர்.

அங்கிருந்தபடி பிளஸ்-1 வரை படித்த மரியாபர்வீன், அதன் பின்னர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மரியாபர்வீனின் செலவுக்காக முகமதுபாரூக்கும், ஆசியாநாச்சியாவும் மாதந்தோறும் மும்தாஜ்பேகத்துக்கு பணம் அனுப்பி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திடீரென பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

இதனால் மும்தாஜ்பேகத்துக்கு, மரியாபர்வீனை கவனித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தத்தெடுத்த பெற்றோர் மரியாபர்வீனை விடுதியில் சேர்த்துவிட முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த மரியாபர்வீன், விடுதியில் சேர்த்து விட வேண்டாம், வேறு யாரிடமாவது தத்து கொடுத்து விடுங்கள் என மும்தாஜ்பேகத்திடம் கூறி உள்ளார்.

தத்தெடுத்த பெற்றோர் செலவுக்கு பணம் அனுப்பாததாலும், விடுதியில் சேர்த்து விடுவதாக கூறியதாலும் விரக்தி அடைந்த மரியாபர்வீன் நேற்று முன்தினம் இரவு, மும்தாஜ்பேகத்தின் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளர்ப்பு மகளாக வளர்க்கப்பட்டு வந்த ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story