சபரிமலை விவகாரம்: திருப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது


சபரிமலை விவகாரம்: திருப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 11:15 PM GMT (Updated: 21 Oct 2018 6:53 PM GMT)

சபரிமலை விவகாரம் தொடர்பாக திருப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யப்ப பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் நேற்று மறியல் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை அருகே இந்து மக்கள் கட்சியின் மகளிர் நிர்வாகிகள் ரெயில் மறியல் செய்வதற்காக ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். உடனே ரெயில் மறியலுக்கு முயன்ற 12 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பின்னர் இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாலாஜி தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் 7 பேர் பெரியார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரே நேரத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 19 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தையொட்டி திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story