விவசாயி கொலை வழக்கில் மகன் உள்பட 2 பேர் சரண் போலீசார் விசாரணை


விவசாயி கொலை வழக்கில் மகன் உள்பட 2 பேர் சரண் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2018 7:04 PM GMT (Updated: 21 Oct 2018 7:04 PM GMT)

லத்தேரி அருகே சொத்தை பிரித்து கேட்டு, விவசாயியின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்த மகன் உள்பட 2 பேர் போலீசில் சரணடைந்தனர்.

காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த வாழ்வான்குன்றம் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 65), விவசாயி. இவருக்கு கவியரசன் (45), வீரன் (38) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விவசாயிகளான இருவரும் திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கவியரசன் கடந்த சில நாட்களாக குடும்ப சொத்தை பிரித்து தரும்படி தந்தை பரசுராமனிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர், பிரித்து கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மாலை கவியரசன் சொத்தை பிரித்து தரும்படி மீண்டும் பரசுராமனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த கவியரசன் அங்கு கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலை மீது போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான கவியரசனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவியரசன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய உறவினர் வெங்கடேசன் ஆகிய இருவரும் நேற்று லத்தேரி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தஸ்ரீ மூலம் லத்தேரி போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story