கிண்டியில் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது பிளஸ்–1 மாணவர் பலி
கிண்டியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது பிளஸ்–1 மாணவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் சாந்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சாய்ஸ்ரீவத்சன் (வயது 15). இவர், தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
சாய்ஸ்ரீவத்சன், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று உள்ளார். தற்போது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களாக கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்து வந்தார்.
நேற்று காலை தந்தை ஸ்ரீதருடன் சாய்ஸ்ரீவத்சன், கிண்டியில் உள்ள நீச்சல் குளத்துக்கு வந்தார். சாய்ஸ்ரீவத்சன் தனியாகவும், அவரது தந்தை ஸ்ரீதர் தனியாகவும் நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென சாய்ஸ்ரீவத்சனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நீச்சல் குளத்தில் இருந்து கரையேறி வந்த அவர், மயங்கி விழுந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை ஸ்ரீதர் மற்றும் அங்கு நீச்சல் பயிற்சிக்கு வந்தவர்கள் சாய்ஸ்ரீவத்சனை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சாய்ஸ்ரீவத்சன் பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.