சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் 37 பேர் கைது


சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் 37 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 4:30 AM IST (Updated: 22 Oct 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கும்பகோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தும், சபரிமலை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்.

இந்து விரோத போக்கில் சபரிமலை தரிசனத்துக்கு வந்த மாற்றுமத பெண்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு காவல்துறையின் சீருடையை வழங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்பு நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் அய்யப்பன் வேடமிட்டபடி கலந்து கொண்ட ஒருவர் உள்பட 23 பேரை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அதேபோல் கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட தலைவர் பாலா தலைமை தாங் கினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 14 பேரை கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் 37 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை கண்டித்து பட்டுக்கோட்டையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சன்சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகவதி, பட்டுக்கோட்டை நகர செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சபரிமலையை காக்க சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story