கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
கர்நாடகத்தில், பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை விதித்து மாநில போலீஸ் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் பணி செய்யும் பெண் போலீசார், ஆண் போலீசாரை போன்று ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் மட்டுமல்லாது, ‘காக்கி’ நிற சேலை-ஜாக்கெட் ஆகியவற்றை சீருடையாக அணிந்து வருகிறார்கள். இதற்கு மாநில போலீஸ் துறையும் அனுமதி அளித்து இருந்தது. இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், புதிதாக பணிக்கு சேரும் பெண் போலீசார் முதல் 5 ஆண்டுகளுக்கு ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் அணிய வேண்டியது கட்டாயமாகவும், அதற்கு பின்னர் அவர்கள் காக்கி நிற சேலை-ஜாக்கெட்டை சீருடையாக அணிந்து பணி செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவில் பணி செய்யும் பெண் போலீசார் காக்கி நிற சேலை-ஜாக்கெட் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாறாக, பெண் போலீசாரும், ஆண் போலீஸ்காரர்களை போன்று காக்கிநிற சட்டை, பேண்ட் அணிந்தே பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 16-ந் தேதி கர்நாடக மாநில போலீஸ் துறை தலைவர், ஒவ்வொரு மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது சேலை அணிந்து பணி செய்ய சிரமமாக இருப்பதாக பெண் போலீசார் தெரிவித்தனர். அதாவது, குற்றத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செல்லும்போதும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போதும் சேலை அணிந்து கொண்டு பணி செய்வது கஷ்டமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆண் போலீஸ்காரர்களை போன்றே பெண் போலீசாரும் காக்கி நிற சட்டை, பேண்ட் அணிந்து பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. காக்கி நிற சேலையை சீருடையாக அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெற்றியில் சிறிய அளவில் பொட்டும், காதில் சிறிய கம்மலும் அவர்கள் அணிந்து கொள்ளலாம். ‘பூ’ சூட அனுமதி இல்லை. தலைமுடியை முறையாக சீவி கருப்புநிற பேண்ட் அணிந்திருக்க வேண்டும். தலை முடிக்கு பயன்படுத்தும் சிகை அலங்கார பொருட்களை கருப்பு நிறத்திலேயே பயன்படுத்த வேண்டும். தலை முடிக்கு கருப்பு நிற ‘டை’ மட்டும் அடித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story