நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் ‘எனது தோழிகளுடன் தவறாக நடந்து கொண்டார்’ என துணை நடிகை பேட்டி
நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.
நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்று சுருதி ஹரிகரன் ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பாலியல் புகார் கூறியுள்ள நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை நீதுஷெட்டி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படப்பிடிப்பில் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத அந்த துணை நடிகை ஒரு தனியார் கன்னட செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘அர்ஜூனடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நான் 3 நாட்கள் கலந்து கொண்டு நடித்தேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதிநேர அடிப்படையில் நடித்தனர். அந்த காட்சியில் மாணவிகள் குழுவாக சேர்ந்து நடித்தனர். அப்போது நடிகர் அர்ஜூன், என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை கேட்டார்.
மேலும் அவர் ஒரு ரெசார்ட்டில் உள்ள அறை எண்ணை கொடுத்து, அங்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள், பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளுடன் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார். நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த படத்தில் நடித்தார். அர்ஜூனுக்கும், எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஆயினும் அவர் எங்கள் குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு, அவருக்கு பணம் கொடுத்து பெண்களை அறைக்கு அழைத்துச் சென்றார்.
நடிகர்கள் சுதீப், உபேந்திரா ஆகியோரின் படங்களிலும் நாங்கள் நடித்துள்ளோம். ஆனால் அர்ஜூனுடன் மட்டும் எங்களுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திவிட்டோம்.
இவ்வாறு அந்த துணை நடிகை கூறினார்.
அந்த துணை நடிகை கண்களை தவிர்த்து தனது முகத்தை முழுவதுமாக உடையால் மூடியபடி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அவரது பெயர் உள்பட எந்த விவரத்தையும் கூற அந்த துணை நடிகை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story