கைத்தறி– கால் மிதியடிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி


கைத்தறி– கால் மிதியடிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2018 11:45 PM GMT (Updated: 21 Oct 2018 8:11 PM GMT)

கைத்தறி மற்றும் கால் மிதியடிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தியூரில் ஜி.கே.வாசன் கூறினார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சேதுவெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

வருகிற பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் கட்சியினரை சந்தித்து இடைவிடாது மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டு வருகிறேன். பெண்களுக்கான ‘மீ டூ’ அமைப்பு ஒரு நல்ல அமைப்பு. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும். எனவே பெண்களிடம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

சபரிமலை கோவிலுக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. எனவே பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வது குறித்து கேரள அரசும், கோவில் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கும்.

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாட்சி ஓடைநீரையும், மேட்டூர் அணையின் உபரிநீரையும் அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குளம் மற்றும் ஏரிகளுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.மா.கா. தொடர்ந்து போராட்டம் நடத்தும். அந்தியூரை மையமாக வைத்து மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், மழைநீரை தேக்கி வைக்க அதிக அளவில் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும். கைத்தறி மற்றும் கால் மிதியடிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.


Next Story