காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி; நினைவு தூணுக்கு கவர்னர், அமைச்சர் மரியாதை செலுத்தினர்


காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி; நினைவு தூணுக்கு கவர்னர், அமைச்சர் மரியாதை செலுத்தினர்
x
தினத்தந்தி 22 Oct 2018 4:30 AM IST (Updated: 22 Oct 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கிரண்பெடி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த 10 போலீசார் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்த நாள் காவலர் வீரவணக்க நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் உள்ள காவலர் நினைவுதூண் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி, அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின்போது கடந்த ஆண்டு பணியின்போது உயிரிழந்த புதுவை காவல்துறையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், கிருஷ்ணராஜ், போலீசார் ரவி, கண்ணன், பூங்குழலி ஆகியோரது குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அப்போது இருந்த போலீஸ் டி.ஜி.பி.யின் பயம் காரணமாக இருக்கலாம். இருந்தபோதிலும் நான் இங்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றேன். ஆனால் இந்த ஆண்டு டி.ஜி.பி. சுந்தரி நந்தா எனக்கு அழைப்பு விடுத்தார். இதுபோன்ற நாளில் நாம் வேற்றுமை காட்டக் கூடாது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நாம் நினைவு கூரவேண்டிய தருணம் இது.

டெல்லி சாணக்கியபுரியில் பிரதமர் நரேந்திர மோடி காவலர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூரும் வகையில் தேசிய காவலர் மியூசியத்தை திறந்துவைத்துள்ளார். அதனை ஒவ்வொருவரும் டெல்லி சென்று பார்க்கவேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Next Story