அரசத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் - அதிகாரிகள் நடவடிக்கை


அரசத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2018 9:30 PM GMT (Updated: 21 Oct 2018 8:27 PM GMT)

அரசத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா வட்டாணத்தில் இருந்து மங்கலக்குடி வழியாக தேவகோட்டை செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.

இதனால் அரசத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருவாக்கோட்டை, லெட்சுமி புரம் கிராமங்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் சரவணன் ஆகியோர் பெருவாக்கோட்டை, லெட்சுமிபுரம் கிராமங்களுக்கு மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார். அதன் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை ஆலோசனையின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா, ஊராட்சி செயலாளர் பழனிகுமார் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அங்கு சென்று சேதமடைந்த குழாய்களை எந்திரங்கள் மூலம் சீரமைத்து குடிநீர் வினியோகம் முறையாக நடைபெற உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர்.

அதன் பின்னர் பெருவாக்கோட்டை, லெட்சுமிபுரம் கிராமங்களுக்கு மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் வசதி செய்து கொடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story