மதுரை- ராமேசுவரம் இடையே : ரூ.158 கோடியில் மின்சார ரெயில் பாதை கமிட்டி உறுப்பினர் தகவல்


மதுரை- ராமேசுவரம் இடையே : ரூ.158 கோடியில் மின்சார ரெயில் பாதை கமிட்டி உறுப்பினர் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2018 9:30 PM GMT (Updated: 21 Oct 2018 8:27 PM GMT)

மதுரை-ராமேசுவரம் இடையே ரூ.158 கோடியில் மின்சார ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளதாக ரெயில்வே கமிட்டி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மனித சக்தியால் திறந்து மூடப்பட்டு வரும் தூக்குப் பாலத்தை அகற்றிவிட்டு மின் மோட்டார் மூலம் திறந்து மூடும்வகையில் புதிய தூக்குப்பாலம் அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பாம்பன் ரெயில்வே பாலம் மற்றும் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை நேற்று டெல்லியில் இருந்து வந்த இந்திய ரெயில்வே கமிட்டியின் உறுப்பினர் கான்ஷியான்சிங் ஆய்வு செய்தார்.அப்போது ரெயில்வே அதிகாரிகள் தூக்குப் பாலத்தின் உயரம்,எடை,செயல்படும் அமைப்பு ஆகியவை குறித்து விளக்கி கூறினார்கள். தொடர்ந்து மோட்டார் டிராலி மூலம் மண்டபம் வரை உள்ள ரெயில் பாலத்தின் நுழைவு பகுதி வரை சென்று அவர் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது கூடுதல் கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் ரெயில்வே கமிட்டி உறுப்பினர் கான்ஷியான்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா முழுவதும் மின்சார ரெயில் பாதை இல்லாத பகுதியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசும், ரெயில்வே அமைச்சர் பியூஸ்கோயலும் மின்சார ரெயில் பாதையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மின்சார ரெயில் பாதை இல்லாத பகுதியில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி நிதியில் மின்சார ரெயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடு முழுவதும் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம், சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் ஆகியவற்றை கொண்டு மின்சார ரெயில் பாதை அமைத்து பசுமை ரெயில் போக்குவரத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இயற்கையாக கிடைக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதன் மூலம் நாடு முழுவதும் பசுமை ரெயில் போக்வரத்து வரும் பட்சத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும் ரெயில்வே துறைக்கு ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவு மிச்சமாகும். மதுரை-ராமேசுவரம் இடையே ரூ.158 கோடியில் மின்சார ரெயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தையும் மின்சார பாதையாக மாற்ற வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story