விமானம் மோதியதால் சேதம் அடைந்த கருவிகளை சீரமைக்கும் பணி தொடங்கியது


விமானம் மோதியதால் சேதம் அடைந்த கருவிகளை சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 21 Oct 2018 11:00 PM GMT (Updated: 21 Oct 2018 10:38 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் விமானம் மோதியதால் சேதம் அடைந்த கருவிகளை சீரமைக்கும் பணி தொடங்கியது.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு, கடந்த 12-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பி பறக்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் பின்பகுதியில் உள்ள சக்கரங்கள், விமானங்கள் பறப்பதற்கு வழிகாட்டும் ஆண்டனா கருவிகள் மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதிவிட்டு பறந்ததில் சுற்றுச்சுவர் இடிந்தது. ஆண்டனா கருவிகளும் சேதம் அடைந்தன.

விமான விபத்துக்கான காரணம் பற்றி சென்னை மற்றும் டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியுடன் நடந்த உரையாடல் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும்.

இந்நிலையில் சென்னையில் இருந்து இந்திய விமான நிலையங்களின் ஆணைய குழும தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் 4 பேர் நேற்று திருச்சி வந்தனர். அதிகாரி வினோத்குமார் என்பவர் தலைமையில் வந்து உள்ள இந்த குழுவினர் சேதம் அடைந்த கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவற்றை சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்கினர். இந்த பணிகள் முடிவடைய இன்னும் நில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story