சிறுபாக்கம் பகுதியில்: சாமந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் - மார்க்கெட் அமைத்து தர கோரிக்கை
சிறுபாக்கம் பகுதியில் சாமந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனிமார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள அடரி, மாங்குளம், ஈரியூர், நரையூர், வடபாதி, ஒரங்கூர் உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு மரவள்ளி, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் பருவமழை குறைந்து போனதால், விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து போனது.
எனவே குறைந்த அளவிலான நீரை கொண்டு, சாமந்தி, டில்லி கனகாம்பரம், கோழிக்கொண்டை, மல்லிகை உள்ளிட்ட பூக்களையும், வெண்டை, கத்தரி, பூசணி போன்ற காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையால், சாமந்தி பூக்கள் நல்ல நிலையில் செழித்து வளர்ந்து, அதிகளவில் பூக்க தொடங்கி இருக்கிறது. இந்த பூக்களை கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், தலைவாசல், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து சென்று மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஆனால் விருத்தாசலத்தில் பூ விற்பனை செய்வதற்கென்று தனியாக மார்க்கெட் வசதி இல்லை. எனவே இங்கு மார்க்கெட் வசதி ஏற்படுத்தி கொடுத்தால், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இதற்கு முன்பு கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த சீத்தாராமன், இந்த பகுதி விவசாயிகளுக்கு பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காக விருத்தாசலத்தில் தனியாக பூ மாாக்கெட் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story