மானாமதுரை பகுதியில் மண் உண்டியல்கள் தயாரிப்பு குறைந்தது
மானாமதுரை பகுதியில் மண் உண்டியல்கள் தயாரிப்பு பணி வெகுவாக குறைந்துள்ளது.
மானாமதுரை,
மானாமதுரை நகர் மண்பாண்ட தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் கலை நயமிக்க பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள், மண்பானைகள், மண் குதிரைகள், யானை பொம்மைகள், மண் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் 200–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த மண்பாண்ட தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரை மட்டுமல்லாமல் இதன் அருகே உள்ள உடைகுளம், வேதியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இந்த மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிக்காக மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து மண் எடுத்து வந்து அந்த மண்ணை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி பிசைந்து அதன் பின்னர் மண் பாண்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
சிறு துளி பெரும் வெள்ளம் என்ற பழமொழிக்கேற்ப கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பணத்தின் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து அவர்கள் தங்களது வீடுகளில் மண் உண்டியல் வைத்து அதில் தினந்தோறும் சிறிதளவு பணத்தை சேமிப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இது தவிர சிலர் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் கிராமத்தில் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாக்களுக்கு செலவு செய்வதற்காகவும், ஆண்டுதோறும் வரும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு பயன்படும் வகையில் இந்த உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் கிராமம் முதல் நகரம் வரை இருந்து வந்தது. ஆனால் தற்போது வளர்ந்துள்ள அறிவியல் வளர்ச்சி காரணமாக இந்த உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் தற்போது குறைந்துள்ளது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் இந்த பழக்கம் கொஞ்சம், கொஞ்சமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், பெரியவர்களிடம் மறைந்து விட்டது.
அப்படியே ஒரு சில வீடுகளில் இந்த பழக்கம் இருந்தாலும் அவர்கள் மண் உண்டியல்களை புறக்கணித்து விட்டு பிளாஸ்டிக், தகரம் உள்ளிட்டவைகளால் ஆன உண்டியல்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் இந்த மண் உண்டியல்களுக்கு இருந்த வரவேற்பு முற்றிலும் குறைந்து விட்டது. இங்கு தயாரிக்கப்படும் இந்த உண்டியல்கள் ரூ.25முதல் 100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த உண்டியல்கள் முற்றிலும் கையினால் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் வாரச்சந்தை மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
திருச்சி, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் உண்டியல்கள் வாங்குவதற்காக கடந்த 10 ஆண்டிற்கு முன்பு அதிகஅளவில் வருவார்கள். ஆனால் தற்போது இந்த வியாபாரிகளின் வரத்து மிகவும் குறைந்து போனதால் இங்கு தயாரிக்கப்பட்ட இந்த மண் உண்டியல்கள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் காட்சி பொருளாக உள்ளன. மண் உண்டியல்கள் தயாரிப்பு பணிகளும் குறைந்த விட்டன.