வேப்பூரில்: 2 கடைகளில் பணம் திருட்டு-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வேப்பூர் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் செந்தில்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் 50 சட்டைகள், 100 பேண்ட்டுக்குரிய பிட்டு துணிகளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு செந்தில்குமாரின் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரத்தையும், துணிகளையும் திருடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள பல்பொருள் அங்காடியின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரத்தையும் திருடியுள்ளனர். பின்னர் அருகில் இருந்த தனியார் தொண்டு நிறுவனத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அந்த லாக்கரை தூக்கிச் சென்று அருகில் இருந்த வாய்க்காலில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story