அர்ஜூன் மீது பாலியல் புகார்: நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு


அர்ஜூன் மீது பாலியல் புகார்: நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 22 Oct 2018 6:36 PM GMT)

அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கிஷோர், கருத்து சுதந்திரத்தை யாரும் தடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

பெங்களூரு,

நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்‘ என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படம் கன்னடத்தில் ‘விஸ்மய‘ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தன் மீதான இந்த குற்றச்சாட்டை நடிகர் அர்ஜூன் முற்றிலுமாக மறுத்துள்ளார். சுருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடுப்பதாக அர்ஜூன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுருதி ஹரிகரனுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சேத்தன், நடிகைகள் நீதுஷெட்டி, தாரா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் அர்ஜூனுக்கும் பலரும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகர் கிஷோர், சுருதி ஹரிகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிஷோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் அர்ஜூன் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது. அவருக்கும், நடிகை சுருதி ஹரிகரனுக்கும் இடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெறட்டும். சுருதி ஹரிகரன் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை கூறி இருக்கிறார். இது அவரது உரிமை. இதை நான் ஆதரிக்கிறேன். நாம் பொறுமையை இழக்கக்கூடாது. அவர் என்ன சொல்கிறார் என்பதை பொறுமையுடன் கேட்டுக்கொள்ள வேண்டும். அவரை தடுக்கக் கூடாது.

சுருதி ஹரிகரனின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அவரின் புகழை கெடுப்பது சரியல்ல. மக்களின் இந்த விமர்சனத்தை நான் எதிர்க்கிறேன். அர்ஜூன் மீது மரியாதை உள்ளது. ஆனால் தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை யாரும் தடுக்கக் கூடாது. இவ்வாறு கிஷோர் கூறினார்.

சுருதி ஹரிகரனுக்கு கன்னட திரையுலகில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் நடிகர் அர்ஜூன் நல்ல மனிதர் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் கர்நாடக திரையுலகில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story