கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: காயமடைந்த முதியவரை மீட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: காயமடைந்த முதியவரை மீட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 23 Oct 2018 4:30 AM IST (Updated: 23 Oct 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த முதியவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி(வயது 35). வாடகை கார் டிரைவர். மதி தனது காரில் ஆவுடையார்கோவிலில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு 2 பேரை அழைத்து வந்தார். 2 பேரையும் அங்கு இறக்கி விட்டு, திருச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். மாத்தூரில் தஞ்சாவூர் ரிங்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் புதுக்கோட்டை விராச்சிலையில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, திருச்சி விமான நிலையத்தை நோக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மற்றும் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் வந்தன.இதைப்பார்த்த மதி, தனது காரை சாலையின் இடதுபுறத்தில் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது மாத்தூர் அருகே உள்ள சின்னசூரியூரை சேர்ந்த முருகேசன்(38) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மதி காரின் பின்புறத்தில் மோதி கீழே சாய்ந்தது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த முருகேசனின் தந்தை தங்கமணி(65) சாலையில் விழுந்து காயமடைந்தார். இதைபார்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து காயமடைந்த தங்கமணியை மீட்டு ஆறுதல் கூறினார். இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களது வாகனங்களில் இருந்து இறங்கி வந்தனர்.

பின்னர் பாதுகாப்பு வாகனத்துடன் வந்த ஆம்புலன்சில் காயமடைந்த தங்கமணியை மீட்டு முதல்-அமைச்சர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் முதல்-அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலை விபத்து குறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story