கோவிந்த மங்கலத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிராமமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கோவிந்தமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்குட்பட்டது கோவிந்த மங்கலம் கிராமம். மின்மோட்டார் முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து விட்டது. தண்ணீர் தொட்டியும் முற்றிலும் சேதமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. காவிரி தண்ணீரும் முறையாக வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் ஊரின் வடக்கு மற்றும் தெற்குத் தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அச்சத்துடனே அப்பகுதி மக்கள் வசிக்கும் நிலை உள்ளது. மேலும் யூனியன் நடுநிலைப்பள்ளியின் கூடுதல் கட்டிடம் சேதமடைந்து மாதங்கள் பலவாகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதனை விரைவாக சீரமைக்க வேண்டும். ஊரில் உள்ள ரேஷன் கடை தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்த கட்டிடமும் கட்டித்தர வேண்டும். மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகமும் பராமரிப்பின்றி பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
கோவிந்தமங்கலத்தில் இருந்து ஆனந்தூர் வரை உள்ள சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. எனவே இப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலை, தண்ணீர் வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள், ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






