காரங்காட்டில் கடலில் சொகுசு படகு சவாரி வனத்துறை ஏற்பாடு
காரங்காட்டில் சுற்றுலா பயணிகள் கடலில் சொகுசு படகு சவாரி செய்ய வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் படகு சவாரி செய்ய படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள கடலில் படகுகளில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கம் இல்லாமலும் லேசான மழை பெய்யும்போது இங்கு வரும் அபூர்வ வகையான பறவைகளையும் அவை பறந்து செல்லும் அழகையும், இங்குள்ள மாங்குரோவ் காடுகளின் இயற்கையையும் கண்டு ரசிக்க ஏதுவாக படகில் மேற்கூரை அமைத்து சொகுசு படகு சவாரிக்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கான நடைமேடை, சிற்றுண்டி விடுதி, தங்கும் அறைகள், கடலுக்குள் சென்று அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றை ரசிக்கவும் வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.