திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வாலிபர் அடித்துக்கொலை முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டிய 4 பேர் கைது


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வாலிபர் அடித்துக்கொலை முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 4:30 AM IST (Updated: 23 Oct 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சாந்தோமில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை சாந்தோம் தேவாலயம் எதிரே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலையில் அதே பகுதியை சேர்ந்த இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனின் நண்பரான நொச்சி நகரை சேர்ந்த விஜய் (வயது 22) என்பவரும் கலந்து கொண்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

வரவேற்பு நிகழ்ச்சியில் கேக் வெட்டும் போது ‘ஸ்பிரே’ அடித்ததில் விஜய்க்கும், வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கோபத்துடன் மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற விஜய், சிறிது நேரத்தில் கத்தியுடன் அங்கு வந்தார்.

சரமாரியாக தாக்கினர்

பின்னர் அவர் மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டார். இது ஏற்கனவே அவருடன் தகராறில் ஈடுபட்டவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் விஜய்யின் கையில் இருந்த கத்தியை பறித்துக்கொண்டு அருகில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜய் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். 

தனிப்படை அமைப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக மயிலாப்பூர் போலீஸ் துணை கமி‌ஷனர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், உதவி கமி‌ஷனர் உக்கிரபாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், செந்தில் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

முன்விரோதத்தில் கொலை

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், நொச்சி நகரை சேர்ந்த உலகநாதன் (24), ஜெயகுமார் (25), அசோக் (24) மற்றும் மணிகண்டன் (26) ஆகிய 4 பேரும் விஜய்யை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, வியாசர்பாடி மற்றும் நொச்சி நகரில் பதுங்கியிருந்த அந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உலகநாதனுக்கும், விஜய்க்கும் இடையே ஏற்கனவே பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர்பாக தகராறு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த முன்விரோதத்தில் விஜய் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story