நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? அமைப்பு செயலாளர் செந்தில்பாலாஜி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? அமைப்பு செயலாளர் செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 8:25 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க., யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் செந்தில்பாலாஜி கூறினார்.

மணப்பாறை,

திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மணப்பாறையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான மனோகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பழகன், அமைப்புச் செயலாளர்கள் செந்தில் பாலாஜி, சாருபாலா தொண்டைமான், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

நகர செயலாளர் மதிவாணன், ஒன்றிய செயலாளர்கள் வடமலை, பெருமாள் என்ற அருணாச்சலம், சவுந்தர்ராஜன், பேரூர் கழகச் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேசும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஐ.சி.யூ. அருகே நின்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை. ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பிதுரை தான் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம் என்று கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சித்தாநத்தம் வி.ரெங்கசாமி, நாசர் முகமது, வக்கீல் செங்குட்டுவன், அப்துல்லா, துளசிசேகரன், ராஜா முகமது, மகேந்திரன், மைக்கேல் ஆல்பர்ட், அழகேசன், பாலாஜி, ரெத்தினபாண்டியன், ராஜகுமாரி, செல்வராஜ், அன்பு என்ற வேலுச்சாமி, சில்லி பாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட மாணவரணிச் செயலாளர் வீரமணிமாறன் நன்றி கூறினார்.

முன்னதாக செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவால் உரு வாக்கப்பட்ட இந்த அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். இந்த வாரம் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் கவர்னரிடம் மனு கொடுத்தோம். நாங்கள் சட்டமன்றத்திற்குள் செல்லும் நிலை வரும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஒத்தகருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்போம். இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நிச்சயமாக வெற்றி பெறுவோம். எங்களை எதிர்ப்பவர்கள் டெபாசிட் கூட பெற முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதால் தான் அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தெரியவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story